Tamil Thai Vazhthu - தமிழ்த்தாய் வாழ்த்து

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! 
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! 
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே! 
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!


தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ 
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் 
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் போனா?


செந்தமிழே! உயிரோ! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேன்! 
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!


முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனலீ மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!


பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் கனக. சுப்புரத்தினம்